Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் சந்தேகம் – 7 பேர் தொடர் கண்காணிப்பு!

தமிழ்நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் சந்தேகத்திற்குரிய ஏழு பேர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில், மாநில அளவிலான அதிகாரிகளின் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ், ‘ சீனா மற்றும் கொரோனா பாதிப்பு நாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் இங்கு வந்த 13 ஆயிரத்து 132 பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டனர். அவர்களில் ஆயிரத்து 351 பயணிகள் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மருத்துவக் கண்காணிப்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ளனர். இவர்களில் சீனாவிலிருந்து மட்டும் 1,315 பேர் வந்துள்ளனர்.

சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை என்பது உறுதியானதால், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் 24 மணிநேர கண்காணிப்பு மையத்திலிருந்தும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பாதுகாப்பு உபகரணங்களும் தேவையான அளவு தயார் நிலையில் உள்ளன.

தமிழ்நாட்டில் தற்போது 7 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் தனிப்பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு சித்த மருத்துவத்தில் இதுவரை எந்தவித மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வாறு மருந்துகள் இருக்கிறது எனக் கூறினால், இந்திய மருத்துவத்துறை அதனை ஆய்வு செய்யும் ‘ எனத் தெரிவித்தார்.

Categories

Tech |