தமிழகத்தில் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா மேலும் 25 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 180 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவுக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது, எனினும் தமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக புதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். 3 முறை மாவட்ட ஆட்சியர்களிடம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு குழுவிலும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என விளக்கம் அளித்துள்ளார். முக கவசங்கள் தேவையான அளவு கையிருப்பு உள்ளதாகவும், உயிர்பலியை தவிர்க்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என்றும் கூறிய அவர் நாட்டிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் முன்னிலையில் இருப்பது தமிழகம் தான் என கூறியுள்ளார். தமிழகத்தில் அரசு சார்பாக 17 , தனியார் சார்பில் 10 என மொத்தம் 27 பரிசோதனை மையங்கள் உள்ளன.
இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும் என முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் காய்கறிகள் விலை உயர்ந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு என குறிப்பிட்ட அவர் ஏழை, எளிய மக்கள் வாங்கும் அளவுக்கு காய்கறிகளின் விலையை அரசு கட்டுப்படுத்தியுள்ளது. துவரம் பருப்பு 500 மெட்ரிக் டன், மிளகு, கடுகு, சீரகம், வெந்தயம் 100 மெட்ரிக்டன் கொள்முதல் செய்து விலை உயர்வு தடுக்கப்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளார்.