சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னை தான் அதிகம் சென்னையில் இன்று மட்டும் 363 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,625ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் 971 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
895 பாதிப்புடன் கோடம்பாக்கம் 2வது இடத்திலும், 699 பேருடன் திரு.வி.க.நகர் 3ம் இடத்திலும் உள்ளது. இந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண் மருத்துவர் உள்பட 4 மருத்துவ மேற்படிப்பு மாணவிகளுக்கு கொரோனா உறுதியானது. மேலும் ஆண்கள் விடுதியில் 2 மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி ஒருவர் தப்பியோடியுள்ளார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே சென்னை மாநகராட்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 34 பணியாளர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளது குறிபிடத்தக்கது.