புதுச்சேரியில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் தற்போது 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்று வரை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக இருந்தது.
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதிலும், ஏப்ரல் 1ம் தேதி மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது. டெல்லி மதக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. அதற்கு பின்பு கோயம்பேடு பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்றவர்கள் மூலம் தொற்று அதிகமானது. இந்த நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்தது.
அதில் புதுச்சேரி மாவட்டத்தில் மட்டும் 17 ஆக உயர்ந்தது. மேலும் காரைக்கால், மாஹே ஆகிய பகுதிகள் ஆரஞ்சு மண்டலத்திலும், யணம் பசுமை மண்டலத்தில் உள்ளது. இந்த நிலையில் ஆரஞ்சு மண்டலமாக இருந்த புதுச்சேரி மாவட்டத்தில் நேற்று 4 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து சிவப்பு மண்டலமாக உருவாகியுள்ளது. மேலும், செல்லிப்பட்டு, அறுமாசபுரம், காலாப்பட்டு ஆகிய பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. இந்த நிலையில் இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.