சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல் ஆய்வாளர் உட்பட 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல இன்று காலை சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் 10ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து அந்த மாணவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சென்னையில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் 3 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 309 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 5,946 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக 300க்கும் மேற்பட்டவர்கள் தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,047 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.