கன்னியாகுமரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 40 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர். மதுரையை சேர்ந்தவர் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே 2 பேர் இறந்த நிலையில் இன்று மட்டும் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே உயிரிழந்த இரண்டு பேருக்கும் நடைபெற்ற கொரோனா சோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவாகியுள்ள நிலையில் இந்த 3 உயிரிழப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
அதில் 66 வயது முதியவருக்கு சிறுநீரக நோய் இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் தற்போது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
2 வயது ஆண் குழந்தை பிறவி எலும்பு நோயால் உயிரிழப்பு என்று தெரிவித்துள்ள சுகாதாரத்துறை நிமோனியா தொற்றால் இரத்தத்தில் ஏற்பட்ட நச்சுத்தன்மையால் 25 வயது ஆண் உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளது.
இறந்தவர்களின் தொண்டை இரத்த மாதிரிகளை ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.