Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை மறு அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல – சென்னை மாநகராட்சி!

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை மறு அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 19ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநராக இருந்த 55 வயது மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அந்த மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டது.

இதற்கு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன்‌ வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் மீது கற்களை வீசி கொடூர தாக்குதல் நடத்தினர். உடனே அவரது உடல் வேலங்காடு இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு‌ காவல்துறை உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனாவால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த விவகாரம் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.

இதனிடையே மருத்துவர் சைமனின் உடலை கீழ்பாக்கம் கல்லறையில் மீண்டும் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று சைமனின் மனைவி கோரிக்கை வைத்திருந்தார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை மாநகராட்சி, கொரோனாவால் உயிரிழந்து நல்லடக்கம் செய்யப்பட்ட மருத்துவரின் உடலை இடமாற்றம் செய்ய வாய்ப்பில்லை என கூறியுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை மறு அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்பதால் ஆனந்தி சைமனின் கோரிக்கையை ஏற்பது சாத்தியமல்ல என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Categories

Tech |