தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் நாளை அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதிகளவில் கொரோனா பரிசோதனையும் நடைபெற்று வருகிறது. நேற்று ஒரே நாளில் 11,377 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 50,03,339 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்காக 43 அரசு மற்றும் 29 தனியார் மையங்கள் என மொத்தம் 72 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கென கொரோனா பேக்கேஜ் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகார் எழுந்தது. அதன் எதிரொலியாக தமிழக அரசின் சார்பில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் குறித்து நாளை அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.