தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் பண்டிகை நாட்களில் கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்டனில் தற்போது போடப்பட்டு வரும் பைசர் தடுப்பூசி வரும் ஜனவரி இறுதிக்குள் தீர்ந்துவிடும் என்று பிரிட்டனின் முன்னாள் சுகாதார செயலாளர் ஜெர்மி ஹன்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, ஆக்ஸ்போர்டு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு அதற்கான வினியோகம் தொடங்கப்பட்டால் தான் பொதுமக்கள் அனைவருக்கும் திட்டமிட்டபடி தடுப்பு ஊசி செலுத்த முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும் 2021 ஆம் வருடம் மார்ச் மாதம் வரை வேறு எந்த நிறுவனங்களில் இருந்தும் தடுப்பூசிகள் பெற வாய்ப்புகள் இல்லை எனவும் கூறியுள்ளார். எனினும் பிரிட்டன் வரலாற்றில் முதல்முறையாக ஒரு லட்சத்து 37 ஆயிரம் பிரிட்டனியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது ஒரு சாதனையாக கூறபட்டுள்ளது.
மேலும் இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், கொரோனோ தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கிடையில் போரிஸ் ஜோன்சன் அரசாங்கம் வரும் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பாக கட்டுப்பாடுகளை தளர்த்தும் வகையில், எளிதில் பாதிப்படைய கூடிய நிலையில் இருக்கும் 25 மில்லியன் பெரியவர்களுக்கு தடுப்பூசி அளிக்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.