இருசக்கர வாகனத்தில் கூரியர் வேன் மோதிய விபத்தில் காய்கறி வியாபாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சரோஜினி நகர் பகுதியில் வைகுண்ட ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வைகுண்ட ராஜா அவரது இரு சக்கர வாகனத்தில் கடைக்கு தேவையான காய்கறிகளை வாங்குவதற்காக நசியனூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து வைகுண்ட ராஜா இருசக்கர வாகனத்தில் இருந்தபடியே தக்காளி விற்பனை செய்யும் வியாபாரியிடம் விலையை கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது நசியனூர் சாலையில் வந்துகொண்டிருந்த தனியார் கூரியர் வேன் ஒன்று வைகுண்ட ராஜாவின் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதனால் பலத்த காயமடைந்த வைகுண்ட ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் இதுகுறித்து வீரப்பன்சத்திரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வைகுண்டராஜாவின் சடலத்தை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய கூரியர் வேன் டிரைவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.