ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாடுகளில் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் மூலமாக அறியப்படுகின்றது
கொரோனா தொற்றினால் உலக நாடுகளில் இருக்கும் 78 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மரணமடைந்த இருப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் ஜான்ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் உலகம் முழுவதிலும் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் தளர்த்தப்பட்ட நாடுகளில் கொரோனா தொற்று அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை புள்ளிவிபரங்கள் மூலம் அறிய முடிகின்றது.
இரண்டு மாதங்களில் நேற்று சீனா தனது அதிகப்படியான கொரோனா பாதிப்பை பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 4,634 பதிவாகியுள்ளது. 20 மில்லியன் மக்கள் வாழும் சீனாவின் தலைநகரான பீஜிங்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நகரம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு மூடப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலை சீன அரசு வெளியிட்டுள்ளது.
வணிக மற்றும் பயணங்களுக்கான தடைகள் நீக்கப்பட்டதால் தென்கொரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தென் கொரியாவின் தலைநகரான சியோலில் தேவாலய வழிபாடுகள், இரவு கொண்டாட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கபட்டதைத் தொடர்ந்து அங்கு பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சியோலில் 30 பேருக்கு நேற்று ஒரே நாளில் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அந்நாட்டின் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரியப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சுகாதார உயர் அலுவலர்களின் எச்சரிக்கையை மீறி அதிபர் ட்ரம்ப் வணிக நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும் திறக்க உத்தரவிட்டதை தொடர்ந்து பல மாகாணங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோ, அரிசோனா, வடக்கு மசிடோனியா உட்பட பல மாகாணங்களில் உணவு விடுதிகள், கேளிக்கை அரங்குகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டதால் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அரபு நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான எகிப்தில் 1677 பேர் நேற்று மட்டும் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் என எகிப்து நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் புதிதாக 753 பாதிப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தபட்டிருந்த ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதிலும் கொரோனா தொற்று சமூக பரவல் கட்டத்தை அடைந்து இருப்பது தெரியவந்துள்ளது.