நாட்டு மீன் விற்பனை அமோகமாக நடைபெறுவதால் மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அதை பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. மேலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையிலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கடல் மீன்களை பிடிக்க முடியாத நிலையில் தற்போது மக்கள் நாட்டு மீன்களை நாடி வருகின்றனர்.
இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் பகுதியில் கரியாப்பட்டினம், தென்னம்புலம், கள்ளிமேடு, கோடியக்காடு, அவரிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் குளம், குட்டை மற்றும் நீரோடைகளில் வளர்ப்பு மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இதில் வளர்க்கப்படும் மடவாய், ஜிலேபி, கெளுத்தி, குறவை மீன், விரால், கெண்டை போன்ற பல்வேறு வகையான மீன்களை மீனவர்கள் சிறு சிறு வலைகள் மூலம் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் கடல் மீன்கள் கிடைக்காத நிலையில் மீன் பிரியர்கள் இந்த நாட்டு மீன்களை அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர். அதன்படி ஆற்றில் பிடிக்கப்படும் இறால் கிலோ ரூபாய் 300 ரூபாய், இறால் ரூபாய் 100, உளுவை ரூபாய் 100, கெண்டை மீன் ரூபாய் 150 க்கும் விலை போகிறது. மேலும் காலையில் பிடிக்கப்படும் மீன்கள் உடனுக்குடன் விற்கப்படுவதால் மீனவர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.