கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குளத்துபாளையம் சிவன் கோவில் வீதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சரோஜினி என்ற மனைவி உள்ளார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளார். இந்த தம்பதிகளின் மகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் இறந்ததால் இவர்கள் தனது மகள் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென உடல்நலக் குறைவால் ராமமூர்த்தி உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து அதிர்ச்சியில் கதறி அழுத சரோஜினி திடீரென மயங்கி விழுந்ததால் அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.