சுவிட்சர்லாந்தில் குடியிருப்பு ஒன்றில் ஒரு தம்பதியர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா மாகாணத்தில் Chatelaine என்ற பகுதியில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. அங்கு வசித்த தம்பதியர் தான் இறந்து கிடந்துள்ளனர். முதல்கட்ட விசாரணையின் படி 64 வயதுடைய அந்த நபர், தன் 58 வயது மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்திருப்பார் என்று கூறப்படுகிறது.
எனினும் அந்த குடியிருப்பின், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் துப்பாக்கி சத்தம் கேட்கவில்லை என்று கூறுகிறார்கள். மேலும் இந்த தம்பதி உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்கள். அதாவது அவர்கள் எப்போதும் மகிழ்வுடன் இருப்பார்களாம். அவர்கள் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டதை நாங்கள் பார்த்ததேயில்லை என்று கூறுகிறார்கள்.
அந்த வீட்டிற்கு தம்பதியை பார்ப்பதற்காக வந்த ஒரு உறவினர் தான் அவர்கள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். எனவே காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.