ரஷ்யாவில் ஒரு தம்பதி காட்டிற்குள் சென்று கரடியிடம் மாட்டி சுமார் பத்து நாட்களுக்கு தண்ணீர் கூட இல்லாமல் மரத்தின்மேல் வசித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ரஷ்யாவை சேர்ந்த அன்டன்-நீனா என்ற ஜோடி காட்டுப்பகுதிக்கு சாகச பயணம் மேற்கொண்டனர். அப்போது அவர்களின் வாகனம் திடீரென்று புதைகுழியில் மாட்டிக்கொண்டது. இரவு நேரம் நெருங்கியதால் வாகனத்தை மீட்க முடியவில்லை. எனவே காலையில் செல்லலாம் என்று இருவரும் வாகனத்திலேயே படுத்துள்ளனர்.
அதன்பின்னர் மறுநாள் காலையில் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு பேஸ் கேம்ப் செல்வதாக வாகனத்தில் ஒட்டி வைத்துவிட்டு, இருவரும் அடர்ந்த காட்டிற்குள் நடந்தே சென்றிருக்கிறார்கள். அப்போது திடீரென்று ஒரு கரடி, அவர்களை துரத்தியுள்ளது. இருவரும் கரடியை விரட்டியடிக்க முயற்சித்துள்ளார்கள்.
எனினும் கரடி சிறிதும் அஞ்சாமல் அவர்கள் அருகே நெருங்கி வந்துள்ளது. எனவே வேறு வழி தெரியாமல் இருவரும் ஒரு பெரிய மரத்தில் ஏறி, அதன் உச்சியில் அமர்ந்துகொண்டனர். எனினும் கரடியும் மரத்தின் கீழ் நின்று கொண்டு அவர்களையே உற்று நோக்கி இருந்துள்ளது. அவர்கள் சிறிது நேரம் கழித்து கரடி சென்று விடும் என்று கருதியுள்ளார்கள்.
ஆனால் கரடி சிறிதும் நகரவே இல்லை. மேலும் அந்த இடத்திலேயே நன்றாக அமர்ந்து கொண்டது. இதனால் சுமார் 10 நாட்களாக தண்ணீர் ஆகாரம் இல்லாமல் மரத்திலேயே இருவரும் இருந்துள்ளனர். சுமார் 10 நாட்களுக்கு பிறகு, அந்த வழியே சென்ற ஒரு நபர் வாகனத்தை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின்பு அவர்கள் உடனடியாக சென்று கரடியை விரட்டியடித்துவிட்டு இருவரையும் மீட்டுள்ளனர்.