வியாபாரி தனது மனைவியுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் நடராஜன்-மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்களுக்கு மேல் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இவர்கள் ஊரடங்கு நேரத்தில் பிஸ்கட் வியாபாரம் செய்தும் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் இந்த தம்பதியினர் தங்கியிருந்த அறையில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. மேலும் அங்கிருந்து வெளியாகிய புகையை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது தம்பதிகள் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. அதன்பின் உயிருக்கு போராடி கொண்டிருந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தினாலும், வறுமையினாலும் பாதிக்கப்பட்ட தம்பதிகள் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. மேலும் வீட்டில் உள்ள டிவி மற்றும் பிற பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகி விட்டது.