ஏலச்சீட்டு நடத்தியவரின் வீட்டை காவல்துறையினர் திறப்பதற்கு வந்த போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பாக உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவரிடம் ஏலச்சீட்டு போட்டு இருந்த 100-க்கும் அதிகமான நபர்கள் தங்களுக்கு பணம் கிடைக்காத விரக்தியில் மாரிமுத்துக்கு சொந்தமுடைய வீடு, ஏலச்சீட்டு அலுவலகம், இலுப்பை தோப்பு உள்ளிட்டவைகளை பூட்டுப் போட்டு பூட்டி உள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் பூட்டிய வீட்டின் கதவை திறந்து ஆவணங்களை எடுக்க வந்துள்ளனர். அப்போது ஏலச்சீட்டு போட்டு பாதிக்கப்பட்ட 60-க்கும் அதிகமானவர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து கோர்ட்டு அனுமதி இல்லாமல் வீட்டின் பூட்டை திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறை சூப்பிரண்டு சபியுல்லா மற்றும் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் தீபன் போன்ற அதிகாரிகள் நேரில் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் இதற்கு அவர்கள் சமாதானம் ஆகவில்லை. இதனைத் தொடர்ந்து கோர்ட்டு அனுமதியுடன் வருவதாக கூறி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.