இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் மற்றும் மாமியாருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி சதானிபேட்டை பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு இவருக்கு சுகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் 7 பவுன் தங்க நகையை வரதட்சணையாக கேட்ட போது சுகன்யாவின் தந்தை, தாய் மாமா ஆகியோர் இவ்வளவு வரதட்சனை கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளனர். அதற்கு பார்த்திபனின் குடும்பத்தினர் திருமணத்திற்கு பிறகு மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுங்கள் என்று கூறி சுகன்யாவை திருமணம் செய்துள்ளனர்.
இதனையடுத்து திருமணமான 3 மாதத்திலேயே வரதட்சனை கேட்டு பார்த்திபனின் குடும்பத்தினர் சுகன்யாவை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சுகன்யா 2012-ஆம் ஆண்டு தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பார்த்திபன் மற்றும் அவரது தாயார் பத்மா போன்றோரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளிகளான பார்த்திபன், பத்மா ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.