நிதி நிறுவன அதிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளபட்டியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரும் புகழேந்தி என்பவரும் கடந்த 2000-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் மாஷே குரூப் ஆஃப் டெக்னாலஜி என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனத்தில் ஹேமலதா, பர்வீன், சுரேஷ், சுகதேவன் போன்றோர் ஊழியர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் அதிக அளவு பணத்தை முதலீடு செய்தால் 10 நாட்களில் இரட்டிப்பு பணத்தை திரும்ப தருவதாக இந்த நிதி நிறுவனத்தினர் விளம்பரம் செய்துள்ளனர். அதை நம்பி 86 பேர் பணம் செலுத்தியுள்ளனர். அதன் பிறகு சுமார் 4 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரத்து 62 ரூபாய் பணத்தை நிதி நிறுவனத்தினர் மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து சின்னசாமி என்பவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த கோவை நீதிமன்றம் புகழேந்திக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் 2 கோடியே 77 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, அதனை முதலீட்டாளர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால் தற்போது தலைமறைவாக இருக்கும் புகழேந்திக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் மற்றொரு குற்றவாளியான ராஜாவையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.