சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒட்டகோவில் பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தட்சிணாமூர்த்தி திருச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டு தட்சணாமூர்த்தி குடும்பம் நடத்தியுள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தட்சிணாமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த அரியலூர் மகிளா நீதிமன்றம் தட்சிணாமூர்த்திக்கு நாற்பதாயிரம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.