சத்துணவு திட்டத்தின் கீழ் பயன் பெற்று வந்த மாணவர்களுக்கு நாள்தோறும் முட்டை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலில் இருப்பதால், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதனால் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன் பெற்று வந்த மாணவர்களுக்கு அதற்கான காய்கறி பருப்பு வகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் பயன்பெற்று வந்த மாணவர்களுக்கான முட்டையை நாள்தோறும் வழங்க உயர்நீதிமன்றம் ஆணை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் வீட்டில் இருக்கும் இந்த சூழ்நிலையில், எப்படி முட்டை வழங்கப்பட உள்ளது என்பதை வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளது. முட்டையை தினமும் கொடுக்க இயலாவிட்டாலும் வாரத்தில் ஒருநாள் அடிப்படையில் கூட மொத்தமாக அந்த ஒரு வாரத்திற்கான 7 முட்டைகளை தரலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் மாணவிகளுக்கு அரசுப் பள்ளியில் வழங்கப்பட்டு வந்த இலவச நாப்கின்களும் மாணவர்களுக்கு முட்டை வழங்கும் அதே சமயத்தில் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.