Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தீவிர காய்ச்சல்….. கொரோனா பரிசோதனைக்கு பின்…. மருத்துவர் மரணம்….. கோவையில் சோகம்….!!

கோவையில் மருத்துவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்    சிறுமுகை பகுதியைச் சேர்ந்தவர்கள் வாசுதேவன், ஜோதிமணி தம்பதியர். இவர்களது மகன் ஜெயமோகன்( 30). திருமணமாகாத இவர் நீலகிரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு திடீரென அதிகப்படியான காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனால் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கு வந்ததும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா இருக்கலாம் என்று அச்சமடைந்த மருத்துவர்கள், அவரது சளி மற்றும் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்படவில்லை. மாறாக டெங்கு காய்ச்சல் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த போதிலும் இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தி அவரது உறவினர்களுக்கும், தாய் தந்தையருக்கும் தெரிவிக்கப்பட சோகத்தில் ஆழ்ந்த தாய் கதறி அழுததுடன், மகன் பிரிவை தாங்க முடியாமல் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின் மயக்க நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காரமடை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சலால் இறந்து போன ஜெயமோகன் 2007 ஆம் ஆண்டு நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று முதலமைச்சரிடம் விருது பெற்றவர். இதனால் அவருக்கு அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவமனையில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி நன்றாக படித்து மருத்துவராக நிறைய சேவைகளும் இவர் செய்து வந்துள்ளார். இவருடைய மரணம்  கோவை மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Categories

Tech |