அமெரிக்காவில் மற்றொரு நாய்க்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் ஒரு தம்பதியினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அவர்கள் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த ஆறு வயது செல்லப் பிராணியான நாயை சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து கவனித்து வந்துள்ளனர். திடீரென நாய் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அதற்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். பரிசோதனையின் முடிவில் நாய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கால்நடை மருத்துவர்கள் நாய்க்கு ஏற்கனவே நரம்பு மண்டலத்தில் கோளாறு இருந்திருக்கலாம் என சந்தேகம் கொள்கின்றனர். விலங்குகள் மூலமாக தொற்று பரவுவது மிகமிக குறைவு என்று அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாகவே நியூயார்கில் 4 வயதான பெண் புலிக்கும் கரோலினா மாநிலத்தில் இருக்கும் நாய் ஒன்றுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.