ரெமடிசிவர் கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதாக கூறி அந்த மருந்தை அதிபர் டிரம்ப் அங்கீகரித்துள்ளார்
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெமடிசிவர் மருந்தை கொடுக்க அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சம்மதம் தெரிவித்த நிலையில் அவசர உத்தரவு மூலம் அதிபர் டிரம்ப் ரெமடிசிவர் மருந்தை அங்கீகரித்துள்ளார். ரெமடிசிவர் மருந்தால் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்தது கண்டறியப்பட்டதால் அம்மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜிலேட் சயின்ஸ் என்ற நிறுவனம் இந்த ரெமடிசிவர் மருந்தை உற்பத்தி செய்து வருகின்றது.
வெள்ளை மாளிகையில் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டேனியுடன் இணைந்து அமெரிக்க அதிபர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது “இது மிகவும் நம்பிக்கை அளிக்கக் கூடிய செய்தி” என தெரிவித்தார். டேனி பேட்டி அளித்த பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு முதலில் ரெமடிசிவர் மருந்து கொடுப்போம். எந்த தடையுமின்றி அனைத்து நோயாளிகளுக்கும் இந்த மருந்து கிடைக்கும்படி பார்த்துக் கொள்வோம். ஊசி மூலமாக இந்த ரெமடிசிவர் மருந்து கொடுக்கப்படுகிறது. கிளினிகல் ட்ரயலுக்கு பெயரை பதிவு செய்து நோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்படுகின்றது.
15 லட்சம் மருந்துகளை இலவசமாக கொடுக்க தயார் என டேனி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொற்றினால் அதிகளவு பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அல்லது பெரியவர்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம் என அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த இரத்த ஆக்சிஜன் அளவை கொண்டிருப்பது ஆக்சிஜன் சிகிச்சை தேவைப்படும் அல்லது வென்டிலேட்டரில் இருப்பதும் தான் கடுமையாக பாதிக்கப்பட்டதுக்கான அடையாளம் என இந்த அமைப்பு முடிவு செய்துள்ளது. அவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தான் முதலில் இந்த மருந்தை கொடுக்க வேண்டும்.
அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் புதன்கிழமை இந்த மருந்தை உட்கொண்ட ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் குறித்த முடிவுகளை அறிவித்துள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ரெமடிசிவர் மருந்து கொடுத்த பொழுது மருந்தை எடுத்துக் கொண்ட நோயாளிகள் மருந்து எடுத்துக் கொள்ளாத நோயாளிகளை விட விரைவாக குணமாவது கண்டறியப்பட்டுள்ளது. மருந்தை உட்கொண்ட நோயாளிகள் 31% அதிக வேகமாக குணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.