இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு இத்தாலியில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதிலும் ஒப்புதல் அல்லது அங்கீகாரம் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளும் பயணிகளுக்கு சில நாடுகள் பயணக்கட்டுப்பாடு விதிமுறைகளில் தளர்வுகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் இத்தாலி உட்பட 19 ஐரோப்பிய நாடுகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர். இதனால் கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்தி கொண்ட பயணிகளுக்கு பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பை ரோம் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக இத்தாலி அரசு பைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனகா, ஜான்சன் & ஜான்சன் போன்ற தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இந்த கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு தற்பொழுது ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லாட்வியா, நெதர்லாந்து, ருமேனியா, ஸ்லோவேனியா, ஸ்வீடன், ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற உலக நாடுகளும் ஒப்புதல் வழங்கியுள்ளன.