மத்திய பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்திலுள்ள கின்ஜ்ரி கிராமத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் அகர்வால் என்பவர் தனக்குச் சொந்தமாக மாடுகளை வளர்த்து வருகின்றார். இவர் வீட்டின் அருகே 500 மீட்டர் தூரத்தில் மாடுகளை மேய்த்துவிட்டு மாலையில் வீட்டுக்கு அழைத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்..
இதனிடையே ஜூன் 14ஆம் தேதி மேய்ச்சலுக்காக சென்ற பசு ஒன்று மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உரிமையாளர் பல இடங்களில் பசுவை தேடி அலைந்தார். ஆனாலும் பசு கிடைக்கவில்லை. பின்னர் ஜூன் 16ஆம் தேதி பசு இருக்கும் இடம் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து உரிமையாளர் அங்கு சென்று பசுவை அருகில் சென்று பார்த்தபோது பெரும் அதிர்ச்சியடைந்தார்.. அதாவது, பசுவின் தாடை அறுக்கப்பட்ட நிலையில் அது நின்று கொண்டிருந்தது.. உணவில் வெடி வைத்து பசுவின் தாடை அறுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த ஓம் பிரகாஷ், இந்த சம்பவம் குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார்.
புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கால்நடை மருத்துவர்களை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு, கால்நடை மருத்துவர்கள் பசுவுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும், பசுவின் உணவில் வெடி வைத்த அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.