ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி மாவட்டத்தில் ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மாடு மேய்க்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் ரேணிகுண்டா அருகே உள்ள புடி ரயில் நிலையத்தின் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை கண்டார். அந்த சமயத்தில் மும்பையில் இருந்து சென்னைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரவிசங்கர் சிவப்பு துணியை காட்டியவாறு தண்டவாளத்தில் ஓடினார். இதை கண்ட என்ஜின் ஓட்டுநர் ஏதோ அசம்பாவிதம் சம்பவம் நடந்து விட்டதாக கருதி உடனடியாக ரயிலை நிறுத்தினார்.
இந்நிலையில் ரவிசங்கரின் செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரயிலில் இருந்து இறங்கி வந்த டிரைவர் ரவிசங்கருக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இதை தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை சரி செய்தனர். மேலும் மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் அங்கிருந்து கிளம்பி சென்ற பிறகு அவ்வழியே வந்த அனைத்து ரயில்களும் விரிசல் ஏற்பட்டிருந்த இடத்தில் மெதுவாக சென்றது.