இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ ஆண்டுதோறும் சாதனைப் படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. அந்த வகையில் இந்தாண்டு பிசிசிஐ விருது வழங்கும் நிகழ்ச்சி ஜனவரி 12ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன அஞ்சும் சோப்ரா ஆகியோருக்கு, சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விருதுக்கு அவர்கள் இருவரின் பெயரே சரியான தேர்வு என பிசிசிஐ நிர்வாகிகள் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.
இந்திய அணிக்காக 1981 முதல் 1992வரை விளையாடிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 43 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி இரண்டு சதங்கள், 12 அரைசதங்கள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களையும் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியிலும் சிறந்து விளங்கிய ஸ்ரீகாந்த், 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். அந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் அவர் 38 ரன்களையும் விளாசினார்.