கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள முத்தியால்பேட்டை பகுதியில் கமலா என்பவர் வசித்து வருகிறார். அவர் இரண்டரை பவுன் தங்க சங்கிலியை அணிந்து கொண்டு அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அந்த கோவில் விழாவில் பக்தர்களின் கூட்டம் சற்று அதிக அளவில் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவிலுக்குள் சென்று சுவாமியை தரிசிக்க சென்ற கமலாவின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க நகையை மர்மநபர் ஒருவர் பறித்து சென்றுள்ளார். கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததும் வீடு திரும்பிய கமலா கழுத்தில் இருந்த நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் மனவேதனை அடைந்த கமலா அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் முத்தியால்பேட்டை காவல்துறையினர் மர்மநபர் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.