திமுக கூட்டணியை உடைக்க என் மீது பழி போடுகின்றார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
பெண்களை இழிவுபடுத்தும் மனு நூலை தடை செய்ய கோரி வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பெண்களை இழிவு படுத்திவிட்ட்டார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியையோ அல்லது என்னையோ இழிவு படுத்துவது அல்ல இவர்களின் நோக்கம். நான் இடம் பெற்றிருக்கின்ற திமுக கூட்டணியை சிதறடிக்க வேண்டும் என்பதுதான் சனாதன வெறிபிடித்த கும்பலின் நோக்கம். நான் பேசி ஒரு மாதம் ஆகிறது.
செப்டம்பர் 27ஆம் தேதி பேசிய பேச்சு அது உலகம் முழுவதும் பலரும் இணையவெளியில் கேட்டிருக்கிறார்கள். அது என்னுடைய முகநூலிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அது இன்னும் என்னுடைய முகநூலில் கிடைக்கிறது. பெரியார் வலைக்காட்சியில் அன்றைக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்திருக்கிறார்கள். அன்றைக்கே சங் பரிவார்க் கும்பல் சனாதன கும்பல் அந்த உரையை கேட்டு இருக்கும்.
ஆனாலும் இன்றைய தருணத்தில் அவர்கள் அதனை ஒரு அரசியல் யுத்தியாக கையாண்டு திருமாவளவன் எப்படி எல்லாம் பெண்களை இழிவுபடுத்துகிறார் ? அப்படி இழிவுபடுத்திய திருமாவளவனை எப்படி உங்கள் கூட்டணியில் வைத்திருக்கிறாய் ? என்று திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். அதனால் தான் திமுக அவர்களுக்கு சவுக்கடி கொடுத்து இருக்கிறது.
திருமாவளவன் பெரியார் சொன்னதை தான் சொல்லியிருக்கிறார். அம்பேத்கர் சொன்னதை தான் சொல்லியிருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் உங்கள் மனு சொன்னதை தான் அவர் எடுத்து பிரதிபலித்திருக்கிறார், சுட்டிக்காட்டி இருக்கிறார் என்று திராவிட முன்னேற்றக்கழக தலைவர் அண்ணன் தளபதி ஸ்டாலின் அவர்கள் இன்றைக்கு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இடதுசாரிகள், மதிமுக, காங்கிரஸ் பேரியக்கம் மற்றும் தோழமை கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் பேரியக்கம் மற்றும் தோழமை கட்சிகள் அனைத்தும் எனக்கு ஆதரவு கொடுத்துள்ளது. காங்கிரசின் மூத்த தலைவர்கள் சிதம்பரம் அவர்கள் கருத்து சொல்லி இருக்கின்றார். திருமாவளவன் மனுதர்மத்தில் என்ன சொல்கிறதோ… அதைத்தான் அவர் மேற்கோள் காட்டி இருக்கிறார் என்பதை அனைவரும் விளக்கி இருக்கிறார்கள் என திருமாவளவன் தெரிவித்தார்.