உண்ண உணவு தேடி ஊருக்குள் நுழைந்த முதலையை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே இருக்கும் சின்னபொங்கனேரி கிராமத்தில் முதலை ஒன்று இரை தேடி ஊருக்குள் வந்துள்ளது. முதலையை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வனத்துறையினர் முதலையை மீட்டு சிதம்பரம் வனப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஊரடங்கால் ஆள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் கொள்ளிடம் ஆற்றுப் பகுதி வாயிலாக முதலை ஊருக்குள் புகுந்து இருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி அப்பகுதியில் இருக்கும் ஏரியில் மூன்று முதலைகள் இருப்பதாகவும் அதையும் இதே போன்று பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.