ஊரடங்கு காலத்திலும் கோவா விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் சென்ற மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பின்னர் உள்நாட்டு விமான போக்குவரத்து மட்டும் மே 25-ந்தேதி முதல் தொடங்கியது. எனினும் கொரோனா அச்சுறுத்தலால் விமான பயணங்களுக்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கோவா சர்வதேச விமான நிலையத்தில் சென்ற ஜூன் மாதத்தில் இருந்தே தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
அங்கு சென்ற ஏப்ரல் மாதம் 27 விமானங்கள் மட்டுமே விடப்பட்ட நிலையில், ஜூலையில் இந்த எண்ணிக்கை சுமார் 12 மடங்கு அதிகரித்து இருக்கிறது. இது இந்தியாவில் இயல்பு நிலை திரும்புவதன் அடையாளமாகும் எனக்கூறியுள்ள இந்திய விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ.), இதன் மூலம் விரைவில் இயல்பான போக்குவரத்துக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளது. இந்த கொரோனா காலத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க விமான நிலைய ஆணையமும், அனைத்து விமான நிலையங்களும் உறுதி கொண்டுள்ளதாக தனது டுவிட்டர் தளத்தில் ஏ.ஏ.ஐ. தெரிவித்துள்ளது.