அமெரிக்காவின் கோரிக்கைக்கு ஏற்ப ஜப்பான் அரசு, தங்கள் சேமிப்பில் உள்ள கச்சா எண்ணெயை பயன்பாட்டிற்கு கொடுக்க தீர்மானித்திருக்கிறது.
சர்வதேச சந்தையில் கடந்த மாதம் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 80.40 டாலர்களாக அதிகரித்தது. இது இந்திய மதிப்பில் 6,435 ரூபாய். எனவே, அமெரிக்கா, இந்த விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த, ஒபெக் மற்றும் அதன் நட்பு நாடுகளிடம் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க கோரியது.
ஆனால் ஒபெக் நாடுகள் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. இந்நிலையில், அமெரிக்க அரசு, கச்சா எண்ணெய் விலையை குறைக்க, இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய எண்ணெய் நுகர்வு நாடுகளிடம் கேட்டுக்கொண்டது. இதனையடுத்து, அமெரிக்கா தங்கள் சேமிப்பில் இருக்கும், ஐந்து கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை பயன்பாட்டுக்கு அளிப்பதாக தெரிவித்தது.
இந்தியாவில், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் 3 இடங்களில், 3 கோடியே 80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் சேமிப்பில் இருக்கிறது. எனவே, மத்திய அரசு அதிலிருந்து 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை பயன்பாட்டுக்கு கொடுக்க தீர்மானித்திருக்கிறது. இதேபோல, சீனா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் தங்கள் சேமிப்பிலிருந்து கச்சா எண்ணெய்யை பயன்படுத்த இருப்பதாக கூறியிருக்கின்றன. இந்நிலையில், தற்போது ஜப்பானும் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று சேமிப்பிலிருக்கும் கச்சா எண்ணையை பயன்பாட்டுக்கு விடுவதாக தெரிவித்திருக்கிறது.