கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.
சென்னையை சொந்த ஊராகக் கொண்டவர் கூகுள் நிறுவனத்தின் CEO (தலைமை நிர்வாக அதிகாரி) சுந்தர் பிச்சை. இவர் கரக்பூர் IITயில் பொறியியல் பட்டம் பெற்றார். இதனை அடுத்து உலகப் புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பயின்றார். இதனை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவின் பழமை வாய்ந்த வேர்ட்டன் பிசினஸ் ஸ்கூலில் MBA பட்டத்தையும் பெற்றார்.
இத்தனை புகழும் வாய்ந்த இவர் கிரிப்டோகரன்சி பற்றி பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது “இதில் முதலீடுகள் செய்வது தொடர்பாக நான் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். ஆனால் நான் அதனை சொந்தமாக வைத்திருக்கவில்லை. இருப்பினும் அதனை சொந்தமாக மாற்றிக் கொள்ள விருப்பமுள்ளது” என்று கூறியுள்ளார். இதற்கிடையில் பிட்காயின் தான் உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியாக உள்ளது.
தற்போது இருக்கும் சூழலில் 60,000 டாலர்கள் என்னும் அளவில் பிட்காயின் விற்பனையாகின்றது. மேலும் நடப்பாண்டில் இதில் முதலீடு செய்தவர்களின் பங்கானது இரட்டிப்பாகியுள்ளது. இந்நிலையில் கிரிப்டோகரன்சி சந்தையில் காணப்படும் ஏற்ற இறக்கத்தின் காரணமாக அதில் முதலீடு செய்துள்ள இந்தியர்கள் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் கிரிப்டோகரன்சியில் அதிகமான பிரச்சினைகள் இருக்கின்றன என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அண்மையில் கவலை தெரிவித்திருந்தார்.