13ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் நேற்று (அக்.19) நடந்த 37ஆவது லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியில் வாட்சன், டூ பிளேசிஸ், ராயூடு ஆகியோர் அடுதடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் தோனி – ஜடேஜா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக தோனி 28 ரன்களையும், ஜடேஜா 36 ரன்களையும் எடுத்தனர். பின்னர் எளிய இலக்கை நோக்கை களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஸ்டோக்ஸ், உத்தப்பா, சாம்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் சென்னை அணி மீதான நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
ஆனால் அதனை உடைக்கும் விதமாக பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்மித் – பட்லர் இணை, களத்தில் நங்கூரம் போன்று அஸ்திவாரமிட்டு ரன் வேட்டையை தொடர்ந்தனர். இதில் சிறப்பாக விளையாடிய பட்லர், அரைசதம் கடந்து அசத்தினார்.இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியையும் வீழ்த்தியது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 70 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.