ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது .
14 வது ஐபிஎல் சீசன் தொடரில் 35-வது லீக் ஆட்டம் நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது .இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின . அப்போது ஷார்ஜா மைதானத்தில் மணல் புயல் வீசியதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது .இதனால் அரை மணி நேரத்திற்குப் பிறகு டாஸ் போடப்பட்டது .இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூர் அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி – தேவ்தத் படிக்கல் ஜோடி களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .
இதனால் 10 ஓவரில் ஆர்சிபி அணி விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் எடுத்திருந்தது. இருவரும் அரைசதம் எடுத்து அசத்தினர்.அப்போது 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் விராட் கோலி ஆட்டமிழந்தார் .இதன் பிறகு களமிறங்கிய டி வில்லியர்ஸ் 12 ரன்னும் , படிக்கல் 70 ரன்னும், மெக்ஸ்வெல் 11 ரன்னும் ஆட்டமிழந்தனர். இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்துள்ளது. இதில் சிஎஸ்கே அணி தரப்பில் பிராவோ 3 விக்கெட்டும் ,ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதன்பிறகு 157 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சிஎஸ்கே அணி களமிறங்கியது .இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கெயிக்வாட்- டு பிளசிஸ் ஜோடி அதிரடியாக விளையாடினர். இதில் கெயிக்வாட் 38 ரன்னும், டு பிளசிஸ் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பிறகு களமிறங்கிய மொயின் அலி 23 ரன்னும் ,அம்பத்தி ராயுடு 32 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதன்பிறகு களமிறங்கிய ரெய்னாவுடன் ,கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார் .இருவரும் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர் .இறுதியாக சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.