14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 47-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. இதில் முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது . இதில் அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் ருதுராஜ் 60 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இதில் ஜடேஜா 32 ரன்னும் ,ருதுராஜ் 101 ரன்னும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர் .ராஜஸ்தான் அணி தரப்பில் டெவாட்டியா 3 விக்கெட் கைப்பற்றினார். இதன்பிறகு 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது.
இதில் தொடக்க வீரர்களான களமிறங்கிய லீவிஸ் – ஜெய்ஸ்வால் ஜோடி சிறந்த தொடக்கத்தை கொடுத்தனர். இதில் லீவிஸ் 27 ரன்னில் ஆட்டமிழக்க ,மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 50 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதன்பிறகு கேப்டன் சஞ்சு சாம்சன் – ஷிவம் டுபே ஜோடி அதிரடியாக விளையாடியது. இதில் சஞ்சு சாம்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் ஷிவம் டுபே அதிரடி காட்டினார். இதில் 31 பந்தில் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.
அப்போது 15.4 ஓவரில் 170 ரன் எடுத்திருந்தபோது சஞ்சு சம்சன் 28 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதன்பிறகு களமிறங்கிய பிலிப்ஸ் , ஷிவம் டுபே உடன் ஜோடி சேர்ந்தார் . இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர் இறுதியாக ராஜஸ்தான் அணி 17.3 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் அதிரடியாக விளையாடிய ஷிவம் டுபே 64 ரன்னும், பிலிப்ஸ் 14 ரன்னும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.