தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஒருவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டி.டி.பி மில் சாலையில் நடந்து சென்ற தொழிலாளியிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் பழனிச்சாமி நகரில் வசிக்கும் சூர்யா என்பவரை அனுப்பர்பாளையம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவரின் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தொடர்ந்து கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் செயல்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அதன் படி சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை கோவை மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் வழங்கியுள்ளனர். இதுவரை திருப்பூர் மாநகரில் இந்த ஆண்டு மட்டும் 18 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.