ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழ பனைக்குளம் பகுதியில் யோவான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரிவாளால் வெட்டி விட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த செய்துங்கநல்லூர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். அதன்பின் யோவான் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இந்நிலையில் அவர் கீழ பனைகுளத்தில் இருக்கும் தனது வீட்டிலிருந்து வெளியே சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு காட்டுக்குள் யோவான் தலை மற்றும் முகத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் காலைக்கடனை கழிக்க சென்ற யோவானே அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் எந்த காரணத்திற்காக யோவானை கொலை செய்தார்கள் என்றும், அந்த மர்ம நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.