இந்தியாவில் ஊரடங்கு 3.0 இன்றுடன் முடிவடைகிறது, மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? என ப. சிதம்பரம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை 3ம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு இன்றுடன் நிறைவடைடைய உள்ள நிலையில் 4ம் கட்டமாக ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் அமல்படுத்தப்பட உள்ள லாக்டவுன் 4 மிகவும் மாறுபட்டதாக இருக்கும், மே 18ம் தேதிக்கு முன் இதற்கான விவரங்கள் வெளியிடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று ஊரடங்கு உத்தரவு எத்தனை நாட்கள் நீட்டிக்கப்படும், என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்ப்பில் நாட்டு மக்கள் உள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், கொரோனா தொற்று பரவுவதை பாஜக அரசால் தடுக்க முடியாது.
காரணம், அரசின் நிர்வாக இயந்திரம் பழுதடைந்து கிடக்கிறது, இதைச் செய்யக் கூடிய உள்ளாட்சி அமைப்புகள் பல மாநிலங்களில் கிடையாது அல்லது அதிகாரங்களில்லாமல் இருக்கின்றன. ஊரடங்கு 3.0 இன்றுடன் முடிவடைகிறது. அரசு என்ன செய்யப் போகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நேற்று கொரோனா தொற்று 4,675 பேருக்குப் பரவியது. தற்காப்பு நடவடிக்கைகளை ஒவ்வொரு மனிதரும் மேற்கொண்டு தொற்றுலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே ஒரே வழி என குறிப்பிட்டுள்ளார்.