இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பு செய்வது குறித்து 11ஆம் தேதி முடிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய மாநில அரசு அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது. ஏப்ரல் 14ம் தேதியுடன் முடியும் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை மத்திய அரசு தரப்பில் நடைபெற்று வருகிறது. ஏனென்றால் கடந்த சில வாரங்களாகவே கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கையும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி அனைத்து கட்சி மக்களவை பிரதிநிதிகளுடன் காணொளியில் ஆலோசனை மேற்கொண்டார். இதில் நாட்டின் சமூக அவசர நிலை நிலவுகிறது. ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டியது முக்கியம் என அரசு செயல்படுகிறது. இக்கட்டான இந்த காலகட்டத்தில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. நாட்டின் தற்போதைய தற்போது இருக்கும் சூழல் சமூக அவசர நிலை போன்றது என்று மோடி தெரிவித்தார்.
அதே போல பெரும்பாலான மாநிலங்கள் சார்பில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர் உடன் காணொலி காட்சி மூலம் பேச இருக்கின்றார். இந்த ஆலோசனை முடிந்து ஊரடங்கு நீடிக்க முடிவு எடுக்கப்படுவதாக தெரிகின்றது.