பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொளியில் ஆலோசனை நடத்தி வருகின்றார்.
இன்று பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இது ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவத்தொடங்கியதை தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி 21 நாள் ஊரடங்கு அமலுக்கு வந்தது.
ஏப்ரல் 14ஆம் தேதி ஊரடங்கு முடியும் நிலையில் ஏப்ரல் 11 ஆம் தேதி மாநில முதலமைச்சர்களுடன் காணொளி மூலம் மோடி கலந்துரையாடினார். அப்போது பெரும்பாலான மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஊரடங்கு நீட்டிக்க வலியுறுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 14ஆம் தேதி முடிவடைய இருந்த ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி அறிவித்தார்.
ஆனால் இதுவரை கொரானா தொற்று கட்டுப்படுத்தப்படவில்லை. புதிதாக பலரும் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர். பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கையும் 800ஐ கடந்துவிட்டது. அதேநேரம் நாடு முழுவதும் சில இடங்களில் அறிகுறிகள் ஏதும் இன்றி கொரோனா தொற்று பலரையும் பாதித்து வருகிறது.
சமூக பரவல் என்னும் மூன்றாவது கட்டத்திற்கு தொற்று சென்று விடக்கூடாது என்பதில் மத்திய மாநில அரசு கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காலை 10 மணியளவில் முதலமைச்சர்களுடன் காணொளி வழியாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அந்த ஆலோசனையின் முடிவில் ஊரடங்கு நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்து முதலமைச்சர்களின் கருத்துக்களை கேட்டு அறிந்து கொள்வார்.
கொரோனா கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி மார்ச் மாதம் 20 ஆம் தேதி முதல் அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் விவாதித்தார். கடந்த 11ம் தேதியும் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல் அமைச்சர்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடினார். எனவே இன்று மூன்றாவது முறையாக முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கின்றார். முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநில முதல்வர்களிடம் பேசி வருக்கின்றார்.