இங்கிலாந்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அந்நாட்டு மக்கள் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இங்கிலாந்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சரியாக அனைத்தும் பின்பற்றபட்டால் ஜூன் 21-ஆம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் நிறைவுக்கு வரும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார். இந்நிலையில் உருமாறிய பி.1.617 வைரஸ் இங்கிலாந்து மக்களிடையே பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெயில் காலம் தற்போது நிலவி வருவதால் பூங்காக்களிலும், கடற்கரைகளிலும் மக்கள் அதிக அளவில் கூடி வருகின்றனர்.
எனவே ஒரு மாதம் வரை ஊரடங்கின் கடைசிகட்ட தளர்வுகளை கொண்டுவருவதற்கு காலம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு எந்த அளவு தடுப்பூசிகளின் செயல்திறன் உள்ளது என்பது குறித்தும் இங்கிலாந்து அரசு ஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளது. மேலும் கொரோனா தொற்றின் அலை முற்றிலுமாக கட்டுப்பாட்டிற்குள் வருவதற்கு முன்பாக ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தினால் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளும் முற்றிலுமாக வீணாகிவிடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
.