கொரோனா தொற்று பாதிப்பு நார்வே நாட்டில் குறைந்து வருவதால் ஊரடங்கை தளர்த்த நார்வே அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் ஐரோப்பிய நாடுகளை விட நார்வே நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா தொற்று பாதிப்பு நார்வே நாட்டில் தற்போது சில நாட்களாக குறைந்து வருகிறது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்த்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி மே 27-ம் தேதியில் முதல்கட்டமாக பொது நிகழ்ச்சியில் 200 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம் திரையரங்குகள், விளையாட்டு அரங்கங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் ஆகியவை சில கட்டுப்பாடுகளுடன் திறக்க அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் முதல் டோஸ் தடுப்பூசியினை மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் போட்டு கொண்டுள்ளதாகவும், இரண்டாவது டோஸினை சுமார் 15 சதவீதத்திற்கும் அதிகமானோர் செலுத்தி கொண்டதாகவும் நார்வே சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.