தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியதாக 1லட்சத்து 40ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 1 லட்சத்து 19 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை, ரூ. 53.72 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்டு இன்று 18வது நாளாக அமலில் உள்ளது. 21 நாட்களுக்கு நீடிக்கும் இந்த உத்தரவு ஏப்.14ம் தேதியோடு முடிவடைகிறது. ஆனால், கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ளதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டது.
அதனடிப்படையில், இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடி அனைத்து மாநில தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதை நிலையில், ஊரடங்கு உத்தரவை முறையாக கடைபிடிக்கும் நோக்கத்தில் தமிழகம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு விதியை மீறி வெளியே வரும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், இதுவரை 1 லட்சத்து 51 ஆயிரத்து 155 பேர் கைது செய்யபட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் 1 லட்சத்து 40 ஆயிரத்து 176 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் தேவையின்றி சாலையில் சுற்றி திரிந்த 1லட்சத்து 19 ஆயிரத்து 286 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, உத்தரவை மீறியவர்களிடம் இருந்து சுமார் 53 லட்சத்து 72 ஆயிரத்து 444 ரூபாயை அபராத தொகையாக வசூலித்துள்ளது. இதுவரை கைது செய்யப்பட்டுள்ள அனைவரின் மீதும் தோற்று நோய் தடுப்பு சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை தடுப்பு சட்டம் என 2 பிரிவின் கீழ் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.