Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு சாபம்… ஆட்டோ டிரைவரின் மூர்கத்தனமான செயல்…. சென்னையில் பரபரப்பு…!!

சப்-இன்ஸ்பெக்டர் ஆட்டோவை பறிமுதல் செய்ததால் கோபமடைந்த டிரைவர் அதிகாரியை ஒருமையில் பேசி சாபமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள முத்தியால்பேட்டை காவல்துறையினர் பாரதி மகளிர் கலைக்கல்லூரி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற ஒரு ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் ஆட்டோ டிரைவர் வீனஸ் பகுதியில் வசிக்கும் அஸ்கர் அலி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் உடல் ஊனமுற்றோரை தனது ஆட்டோவில் அழைத்துச் சென்று சமூக சேவை செய்வதாக காவல்துறையினரிடம் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் இ-பதிவு சான்றிதழை காண்பிக்குமாறு கேட்டதற்கு, அஸ்கர் அலி அதனை காண்பிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் கிருத்திகா என்பவர் ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளார். இதனையடுத்து கோபமடைந்த ஆட்டோ டிரைவர் பெண் சப் இன்ஸ்பெக்டரை கையை நீட்டி மிரட்டும் பாணியில் ஒருமையில் பேசியுள்ளார். அதற்கு சப்-இன்ஸ்பெக்டர் உங்களை நான் மரியாதையுடன் நடத்துவதால் நீங்களும் மரியாதையாக பேசுங்கள் என்று கூறியுள்ளார். அதனையும் கண்டுகொள்ளாத ஆட்டோ டிரைவர் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டரை தரக்குறைவாக பேசியதோடு, கோபத்தில் அவருக்கு சாபமிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த முத்தியால்பேட்டை காவல்துறையினர் ஆட்டோ டிரைவர் அஸ்கர் அலியை  கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |