வாடிக்கையாளர்கள் அவசியமற்ற சேவைகளுக்காக வங்கிக்கு வரவேண்டாம் என்று இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்து மிரட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்த இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனிடையே நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 341 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே பிரதமர் மோடியின் வேண்டுகோளின் படி, சுய ஊரடங்கு உத்தரவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வாடிக்கையாளர்கள் அவசியமற்ற சேவைகளுக்காக வங்கிக்கு வரவேண்டாம் என்று இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்ததாவது, வாடிக்கையாளர்கள் அவசியமற்ற சேவைகளுக்காக வங்கிக்கு வரவேண்டாம். வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளை வங்கி ஆன்லைன் சேவை மூலம் பூர்த்தி செய்து கொள்ளலாம் . வடிக்கையளர்கள் தேவைக்காக ஆன்லைன் சேவைகளை வழங்க ஊழியர்கள் எப்போதும் தயாராக உள்ளனர்.
மேலும் தேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் வங்கி கிளையின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும், நாளை முதல் டெபாசிட், காசோலை, அரசு பரிவர்த்தனை போன்ற முக்கிய சேவைகள் மட்டுமே வங்கிகளில் நடைபெறும் என்றும் கூறியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாடிக்கையாளர்களுக்கு இந்திய வங்கிகள் சங்கம் இதனை அறிவுறுத்தியுள்ளது.