நெல்லை அருகே ஓடும் பேருந்தில் மர்மநபர்கள் 2 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கிள்ளி குளத்தில் இருந்து நேற்று இரவு நெல்லைக்கு செல்லும் அரசு பேருந்தினுள் அக்கிராமத்தைச் சேர்ந்த இருவர் ஏறினர். அவர்களை தொடர்ந்து 2 மர்ம நபர்கள் வழிமறித்து பேருந்தினுள் ஏறினர். பின் பேருந்து சிறிது தூரம் சென்ற பிறகு ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பேருந்தில் பயணித்த கிள்ளி குளத்தை சேர்ந்த இரண்டு பேரை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தனர்.
இதனைக்கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்து அலற ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். பின் முறப்பாடு காவல் நிலையத்திற்கு சம்பவம் குறித்து தகவல் அளிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. அதே வேளையில் படுகாயமடைந்தவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தப்பியோடிய மர்ம நபர்கள் வல்ல நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்ட நிலையில் சில மாதங்களாகவே பகை காரணமாக மாறி மாறி கொலை சம்பவங்கள் வல்லநாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்த கொலைகள் உடன் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் காவல்துறையினர் தங்களது விசாரணையில் கணித்துள்ளனர். தப்பி ஓடிய மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். ஓடும் பேருந்தில் மர்ம நபர்கள் அரிவாளால் கதறக்கதற வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.