பழுதடைந்த சிலிண்டர் வெடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் வசித்து வருபவர் வைகுண்டம். இவருக்கு திருமணம் ஆகவில்லை. வைகுண்டம் அப்பகுதியில் உள்ள ஒரு சமையல் எரிவாயு ஏஜென்சியில் வேலை பார்த்து வந்தார். அதே ஏஜென்சியில் திருவேங்கடத்தை சேர்ந்த பசுபதி பாண்டியன் என்பவரும் தாழையூத்தை சேர்ந்த காளி என்பவரும் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பழுதடைந்த ஒரு சிலிண்டரை பசுபதி பாண்டியன் மற்றும் காளி ஆகியோர் வைகுண்டம் வீட்டிற்கு லோடு ஆட்டோ மூலம் எடுத்துச் சென்றனர். அப்போது வைகுண்டம் சமைத்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக சிலிண்டர் எரிவாயுவில் கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியது. இவ்விபத்தால் அங்கிருந்த மூவரும் படுகாயம் அடைந்தனர். இதனை அடுத்து காயமடைந்த மூவரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மூவரில் வைகுண்டம் மற்றும் காளி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இவர்களில் எஞ்சியுள்ள பசுபதி பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலிண்டர் வெடித்த காட்சிகள் வைகுண்டம் வீட்டின் அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிகழ்வு குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.