சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் கேஸ் ஏஜென்சிகள் வசூலிப்பதாக சென்னை அன்னனூரைச் சேர்ந்த லோகரங்கன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக கேஸ் ஏஜென்சிகளுக்கு டெலிவரி கட்டணம் வழங்கப்படுகின்றது. இந்த தொகையை சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்களுக்கு வழங்காமல் ஏஜென்சிகளே எடுத்துக் கொள்கின்றனர்.
மேலும், டெலிவரிக்காக நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கும்படி, டெலிவரி செய்யும் நபர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதனால் பொதுமக்கள் பணம் 500 கோடி ரூபாய்க்கு மேல் சுரண்டப்படுகிறது. இதை தவிர்க்க டெலிவரி செய்யும் நபர்களுக்கு சீருடை, அடையாள அட்டைகளை வழங்கி அவர்களின் பணி வரன்முறை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிலிண்டர் சப்ளை செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால் அது குறித்து புகார் அளிக்க வசதி உள்ளதாகவும் அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவர் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் சிலிண்டர் டெலிவரி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்பதை உறுதி செய்யும் வேண்டும் என்று எண்ணைய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.